Feb 18, 2011

கிரிக்கெட் சூதாட்ட கும்பல்



கிரிக்கட் போன்ற ஒரு சூதாட்ட சோம்பேறி விளையாட்டை பிரபலப்படுத்த விளம்பரங்கள் மூலம் மக்கள் முட்டாளக்கப் பட்டுவருகிறார்கள். மக்கள் வறுமை நீங்க வேண்டும் என்று கவலைப் படாத சூதாட்ட கும்பல்கள் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று பார்ப்பனிய யாகங்கள் நடத்தி வருகிறது. இந்திய தேசியப் பற்று என்கிற பெயரில் முதலாளிகள் அவர்களுக்கான பொருளாதார லாப நோக்கோடு செய்யும் மிகப் பெரிய ஊழல் இது.  கிரிக்கெட்டில் இந்தியப் பண்பாடு என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. நம் பெருளாதாரத்தை அந்நிய நாட்டு முதலாளிகளும், இந்தியப் பெரு முதலாளிகளுக்கும் விட்டுத்தரும் கையாலாகத்தனம் மட்டுமே இதில் எஞ்சியுள்ளது.  

இதற்கிடையில், முதலாளிகளின் பேராசை பள்ளிப் பிள்ளைகளை குறிவைத்து நகர்கிறது. பள்ளிகளில் ஊக்குவிப்பு போட்டி என்கிற பெயரில் ஸ்டம்ப்பைவைத்து ஒரே பந்தில் அடித்து வீழ்த்துபவருக்கு உலகக் கோப்பையில் கிரிக்கெட் விளையாடும் நபரை அறிமுகம் செய்ய அழைத்துச் செல்லும் சிறப்பு வழங்கப்படுவதாக சொல்லி பள்ளிகளுக்குள் புகுந்திருக்கிறது விளம்பரதார நிறுவனம் ஒன்று. பள்ளிகள் இதை எப்படி அனுமதிக்கிறது? இது போன்ற வாய்ப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தது என்று முடிவெடுக்கும் அதிகாரம் பள்ளிகளுக்கு யார் வழங்குகிறார்கள்?

முதலாளித்துவ நிறுவனங்கள் அணைத்து தரப்பிலும் தங்களை சந்தைப் படுத்த முயற்சி செய்வதோடு, குழந்தைகளுக்கு வாய்ப்பளிக்கிறோம் என்கிற போர்வையில் பள்ளிகளை தந்திரமாக பயன்படுத்துகிறது. பள்ளிகளும் அவர்களின் நோக்கம் அறிந்தோ / அறியாமலோ வாய்ப்பளித்து வருகிறது. பிள்ளைகளுக்கு எந்த விளையாட்டு, எந்த பொருள், எந்த சிந்தனை மதிப்பிற்குரியது என்று முதலாளிகள் முடிவு செய்து, அதை வளர் பருவத்திலேயே விஷமாக ஏற்றி வருகிறார்கள்.

கிரிக்கெட் பித்து எனும் இந்தக் கொடிய தொற்று நோய் கிராமங்களையும் ஊடுருவியிருக்கிறது. எவர் பிடிகளிலெல்லாம் இருந்து பிள்ளைகளின் எதிர்காலத்தை காக்க வேண்டியுள்ளது என்ற அச்சம் எழுகிறது.

No comments:

Post a Comment