Oct 11, 2016

இதுவரை வசுமித்ரவுக்குக் கிடைத்துள்ள பட்டங்கள்

தமிழ்நாட்டில் அறிவுச்சூழல் எத்தகைய தரத்தில் இருக்கிறது என்பதற்கு சமீப கால ‘அவதூறுகளே’ சாட்சி. அனைத்து ‘விமர்சனங்களிலும்’ அறிவார்ந்த பார்வைகள் இருக்கிறதோ இல்லையோ, தனிப்பட்ட தாக்குதல்களுக்கும், அவதூறுகளுக்கும், இன்னும் சொல்லப் போனால் முட்டாள்தனமானப் பேச்சுகளுக்கும் பஞ்சமே இல்லை.

இந்த இணையவெளி ஏற்படுத்தும் மாயை ஒவ்வொருவரையும் எப்படியெல்லாம் ‘மாற்றுகிறது’ என்பதைக் காணும்போது சற்று அதிர்ச்சிகரமாகவும் இருக்கிறது. பண்பையும், உண்மையையும் அது விழுங்கிவிட்டது என்பதற்கப்பால், (இடதுசாரிகள்’ என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்களிடம்) தத்துவத்தைக் கூட குழிதோண்டி புதைத்துவிடும் அளவுக்கு இந்த முகநூலானது ஓர் அடையாள நெருக்கடியை ஏற்படுத்துகிறது!
சில மாதங்களுக்கு முன்புவரை இந்த நோய் இலக்கிய உலகை மட்டுமே பீடித்திருந்தது. தற்போது அது ஒரு சில ‘இடதுசாரி’களையும் தாக்கியிருக்கிறது.
இலக்கிய உலகின் ‘விமர்சன’ப் போக்கு
1. ஓர் இலக்கியக் கூட்டம் முடிவடைந்த பின்னர், அது தொடர்பானப் பதிவுகள் முகநூலில் தொடர்ந்தது. அப்படி ஒரு விவாதத்தில் நேசமித்ரன் என்பவருக்கு வசுமித்ர சில கேள்விகள் வைத்ததும் தொடங்கியது தாக்குதல்கள்.
அவர் வசுமித்ரவுக்கு அளித்த பட்டங்கள்: ப்ளாட்ஃபார்ம் டிக்கெட்டுக்குப் பின்னாடி இருக்கிற ஆங்கிலத்தைக் கூட படிக்கத் தெரியாதவர், ரவுடி, அடித்துவிடுவார் என்பதாக. அதிலும் உச்சபட்சமாக, அதுநாள்வரை வசுமித்ரதான் எனது கவிதை மேம்படவு, தான் அடைந்த உச்சத்திற்கும் வழிகாட்டி என்றெல்லாம் என்னிடமே சிலாகித்த அவருக்கு திடீரென்று வசுமித்ர ரமேஷ் பிரேதனைக் காப்பியடிப்பவராகிப் போனார்.
இதன் தொடர்ச்சியகக் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், வசுமித்ர மட்டும் உத்தமனா, குடிப்பதில்லையா என்றெல்லாம் சீறிவிட்டு, பொண்டாட்டியைப் போட்டு அடிக்கிறார் என்று ‘மிகுந்த நாகரீகத்தோடு’ ‘விமர்சனங்களை’ எழுதினார். ஆனால், இதுவரை நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. இந்த ’மோதல்’ வசுமித்ரவின் எழுத்து சார்ந்து வந்ததல்ல. தேனியில் கூட்டம் ஏற்பாடு செய்தவர்கள் குறித்து நேசமித்ரன் வைத்த புகார்களுக்கு பதிலளிக்கச் சென்று, அதாவது தன் நண்பனுக்காகப் பேசச் சென்று வசுமித்ர பெற்ற பட்டங்கள் இவை. ஆனால், இன்று அந்த நண்பர் தன்னைக் கேவலமாகப் பேசிய அந்த நேசமித்ரனோடு ‘மிகுந்த நட்பில்’தான் இருக்கிறார்! ஓர் இலக்கிய இதழ் நடத்தினால் போதும், நட்பாவது மண்ணாங்கட்டியாவது!
2. எங்கள் குடும்பத்தில் ஒருவராகக் கூடிப் பழகி, பின்பு ஒரு பதிவிற்கு எதிர்கருத்து தெரிவித்ததாலேயே வசுமித்ரவுக்கு ‘சாதிவெறியர்’ பட்டம் கொடுத்தவர் பேய்க்காமன் என்பவர். பேய்க்காமன் எனும் பெயரை அவருக்கு வைத்ததே வசுமித்ரதான், அவர் இயற்பெயர் விஜயபாஸ்கர். (தலித் சாதியைச் சேர்ந்தவர்). எங்கள் திருமணத்தைக் கூட அவருடைய பொறுப்பில்தான் நடத்தினோம்.
இதில் நகைச்சுவை என்னவென்றால், இன்று தமுஎகச ‘தொண்டர் படை’ எஸ்விஆருக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வருவதுபோல் அன்று தமிழ்ச்செல்வன் குறித்து பேய்க்காமன் எழுதிய அவதூறுக்கு எந்தப் படையும் வரவில்லை. வசுமித்ர மட்டுமே நண்பன் என்ற முறையில் பேய்க்காமனைத் தொடர்பு கொண்டு தவறாக எழுதியிருக்கிறார் என்று சொன்னதோடு, சில எதிர்கருத்துகளையும் வைத்தார். தொலைபேசியில் ‘அப்படியா வசு, சரி வசு’ என்றெல்லாம் பேசிவிட்டு, அடுத்த நொடி, முகநூலில் தமிழ்ச்செல்வனைப் பேசினால் வசுமித்ராவுக்கு ‘ஏன் பொங்குது’ என்று ஆரம்பித்து ‘சாதி வெறி’ என்று தனது சாதியை முன்வைத்து முத்திரை குத்திவிட்டு ஓடிவிட்டார். அவருக்கு நான் வைத்த கேள்விகள் இன்றும் அப்படியே இருக்கிறது.
சில மாதங்கள் கழித்து என்னுடையக் கட்டுரை ஒன்று சிறப்பாக இருப்பதாக எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்! நான் பதில் ஏதும் அளிக்கவில்லை! எனக்கிருந்த ஒரே கேள்வி, வசுமித்ர சாதிவெறியர், அவர் மனைவி ‘முற்போக்காளர்’! (பெண் என்பதாலா?)
3. விக்ரமாதித்தன், தேவதச்சன் இருவரை விமர்சித்து வசுமித்ர ஒரு பதிவை தனது வலைப்பூவில் எழுதினார். அதற்கும் இலக்கிய உலகில் ஒரே புலம்பல்! இங்கு எல்லாமே வழிபாட்டு மனநிலைதான் இருக்கும் போல! விமர்சனத்திற்கு துளியும் இடமில்லாத ஒரு சமூகமாக சில ’அறிவுஜீவிகள் / இலக்கியவாதிகள்’ மாற்றிவருகின்றனர். இப்போது அந்தப் பட்டியலில் சில இடதுசாரி அமைப்புகளின் உறுப்பினர்களும் சேர்ந்திருக்கிறார்கள்.
புத்தகக் கண்காட்சியில் வசுமித்ர ஓர் அரங்கில் உட்கார்ந்திருந்தபோது, ஒரு ‘கவிஞர், எழுத்தாளர்’ ‘அவங்களை எல்லாம் விமர்சிக்கிற! நீ என்ன பெரிய ஆளா’ என்று தானாக வம்பிழுத்து, (அப்போது அவர் குடித்திருந்தார்) மிகவும் அநாகரீகமாகப் பேசி, உணர்ச்சியைத் தூண்டிவிட்டபடியே இருந்திருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் வசு அவரைத் தள்ளிவிட, அங்கு ஒரு சலசலப்பு ஏற்பட்டது!
ஆனால், அச்சம்பவம் குறித்து பதிவுகள் எழுதிய ‘இரு பெரும் ஆளுமைகளில்’! ஒருவர், இந்த இலக்கியவாதிகள் ஏன் இப்படிக் குடித்துவிட்டு பொதுவெளியில் கலாட்டா செய்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக தனது கற்பனையிலிருந்து எழுதினார்.
மற்றொருவரோ வசுமித்ர என்பவர் விரலை கடித்துவிட்டாராமே என்று எழுதினார்!
தோழர்களே! இதுதான் இங்கு நிலவும் ‘விமர்சன அரசியல்’!
4. அதேபோல் சம்பந்தமே இல்லாமல் லக்‌ஷ்மி சரவணக்குமார் என்பவர் என்னைப்பற்றி அவதூறாக ஒரு பதிவு எழுதினார். அதையும் நாங்கள் எப்படிக் கையாண்டோம் எனும் பதிவு எங்கள் தளங்களில் உள்ளது! ஆனால், தாமாக வந்து அவதூறைத் தொடங்கிவிட்டு, எந்த இலக்கியவாதியாவது எங்களைப் பற்றி ஏதேனும் எழுதினால், உடனே அங்கு ஆஜராகி கேவலமானப் பதிவுகளை எழுதுவதை தொடர்ந்துவந்தார். அதற்கு நான் என்ன பதிலடி கொடுத்தேன் என்பது எனது வலைப்பூவில் உள்ளது!
இவரும் தன்னுடைய அத்தகைய செயலுக்குக் கொடுத்த விளக்கம் ‘எவரோ ஒருவரின் தூண்டுதலுக்கு உள்ளாகி அப்படி செய்துவிட்டேன்’ என்று தனிப்பட்ட முறையில் சொல்லி மன்னிப்பு கேட்டுவிட்டு, பொதுவெளியில் வழக்கம் போல தனிப்பட்ட காழ்ப்புகளைத் தொடர்ந்து எழுதினார். அதற்கும் எதிர்வினைகளைப் பதிவு செய்தோம்.
5. இந்த இலக்கியவாதிகள் சிலர் ஏன் தமது ‘இலக்கிய வளர்ப்புத் தொண்டினை’ மற்றப் பெண்களிடமே காட்டுகின்றனர், ஏன் தமது மனைவிக்கு அத்தகைய ‘அறிவினை ஊட்டுவதில்லை’ என்று ஒரு கூட்டத்தில் கேள்வி எழுப்பியதற்காக, அபிலாஷ் சந்திரன் என்பவர் முகநூலில் ‘பொங்கி எழுந்தார்’. கற்பனைக் கதை என்கிற பெயரில், வசுமித்ரவுக்கு என் மீது சந்தேகம், எந்த ஆணும் என்னுடன் பேசுவதை அவன் விரும்புவதில்லை, அவனது நிழல்கூட என்னைக் கண்கானித்தபடியே இருக்கிறது என்று சரோஜாதேவி பத்திரிகைக்குக் கதை எழுதுவதுபோல் எழுதினார்.
அதற்கொரு ‘போராட்டத்தை’த் தொடுக்க வேண்டியதாயிற்று! (சம்பந்தப்பட்டவர் அதன் பிறகு மன்னிப்பு கேட்டார்)
6. இப்போது எஸ்விஆரை விமர்சித்ததும், தமுஎகச ‘தொண்டர் படை’ ஒன்று கிளம்பியிருக்கிறது பட்டங்களுடன் – ரவுடித்தனம், அராஜகம், வயசுக்கு மரியாதை கொடுக்காமல், படித்த திமிர், பொறுக்கி இப்படியாக… இதில் உச்சபட்ச கேவலம் என்னவென்றால், கூட்டத்தில் அடிக்கடி தண்ணீர் குடித்ததைக் கூட ‘ஆளுமைக் கோளாராக’ இழுத்துப் பிடித்து எழுதுவதென்பதுதான்! என்னவகையானப் பண்பு இது! ஒருவேளை இந்த பூர்ஷுவா அறிவுஜீவிகளுக்கு தாகமே எடுக்காதோ?
வசுமித்ர கேட்ட கேள்வி என்ன? முதலில் அவர் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டாரா? இவர்களாக ரஙக்நாயகம்மா நூல் குறித்து ஒரு விவாதத்தைத் தொடங்கிவிட்டு, அதற்கு நேரடியாகத் தொடர்புடைய வசு பதில் சொல்ல எழுந்தபோது, வசு அங்கு வந்திருப்பதைக் கண்டு ’அச்சமுற்ற’ ஆதவன் நேரம், காலம், இது ரங்கநாயகம்மா மேடையல்ல என்றெல்லாம் முதலில் வாய்ப்புத் தரவே மறுத்து, பின்னர் வசு பேசியிருக்கிறார். அதிலும் அவர் விருதுபற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை, நூல் பற்றிய எஸ்விஆரின் கருத்தோடு உடன்படவில்லை என்று சொல்லிவிட்டு ‘எஸ்விஆர்’ எப்படி மார்க்சிய அறிஞர் என்று மட்டுமே கேட்டிருக்கிறார். எஸ்.வி.ஆரை கம்யூனிஸ்டு இல்லை, மார்க்சிஸ்ட் இல்லை என்று வசு சொல்லவில்லை, மார்க்சிய அறிஞர் என்றால் மார்க்சியத் தத்துவத்தை வளர்தெடுக்க அதற்கென அறிவார்ந்த (Schoalrly contribution) பங்களிப்பு செய்திருக்க வேண்டும். எஸ்விஆரின் பங்களிப்பை வாசகர்களே படித்தறியலாம்! அது மார்க்சியத்தை வளர்க்க உதவக்கூடியதா, அல்லது திரிக்கவும், சிதைக்கவும் உதவக்கூடியதா என்பதையும் அறிந்துகொள்ளலாம்! ஆனால் இதற்கு மார்க்சியத்தை அறிந்திருப்பது அவசியம்!
என்னோடு உரையாடும் ஒவ்வொரு புரட்சிகர அமைப்புகளும் (இந்த மார்க்சிஸ்ட் கட்சி போல் அல்லாத) அதில் உள்ள தோழர்களும் எஸ்விஆர், வ. கீதா, அ. மார்க்ஸ், ரவிக்குமார் ஆகியோரை மார்க்சிய எதிர்ப்பாளர்கள் (anti-marxists) என்றுதான் எப்போதும் வசைபாடி வந்துள்ளார்கள். பொதுவெளியிலும் அத்தகையப் பதிவுகள் உள்ளன. ஆனால், இன்றைக்கு வசுமித்ர மட்டுமே எஸ்விஆரை அவதூறு செய்வதாக இவர்கள் திரிக்கிறார்கள். இத்தனைக்கும் வசுமித்ர எஸ்விஆரை மார்க்சிய எதிர்ப்பாளர் என்றுகூட சொல்லவில்லை. மார்க்சிய அறிஞர் என்றால் அதற்கான பங்களிப்பு என்ன என்றுதான் கேட்கிறார். மேலும் எஸ்வீஆர் எழுதிய ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம், அந்நியமாதல், இருத்தலியமும் மார்க்சியமும் போன்ற நூல்கள் எதற்குப் பயன்படக்கூடியவை என்ற அடிப்படையில், இவர் ஒரு தலைமுறையை சீரழித்தவர் என்று பேசியிருக்கிறார். இதில் என்ன தவறு அல்லது பொறுக்கித்தனம் அல்லது சாதி வெறி?
ஒருவரை மார்க்சிய அறிஞரா என்று கேட்பதில் என்ன அராஜகம், மேதாவித்தனம்? இவர்களைப் போல் சதா சர்வ காலமும் ‘மூத்தவர்களுக்கும்’, ‘நண்பர்களுக்கும்’ துதிபாடிக் கொண்டே இருக்க வேண்டுமா? வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கோஷ்டி கானம் பாடிக்கொண்டு தம்முடைய சொந்த போட்டி, பொறாமைகள், வன்மத்தின் காரணமாக ‘கூலி உழைப்பை’க் கேவலப்படுத்தி, தனிப்பட்ட வாழ்க்கையைப் பேசி சீண்ட வேண்டுமா? தமக்கு லைக் போடுவதற்காக கும்பல் சேர்ப்பிற்காக வசைச் சொற்களை நிரப்பி அவதூறு செய்ய வேண்டுமா? இதுபோன்ற பேச்சுகள் ‘ஜனநாயகம்’, ‘நாகரீகமான பேச்சு’ ஆனால் ஒரு விமர்சனம் வைத்தால் ‘ரவுடி’, ‘திமிர்’, பொறுக்கி, ‘சீரியலுக்கு வசனம் எழுதும் கேவலப்பட்டவன்’, (இப்போது நடிப்புத் தொழில் செய்யும் கேவலம் வேறு சேர்ந்திருக்கிறது).
மார்க்சியத்தின் பெயராலும், முற்போக்கு அமைப்பு என்ற பெயரிலும் இவர்கள் செய்யும் இந்த கும்பல்வாத அராஜகத்திற்குப் பெயர் குண்டாயிசமே அன்றி மார்க்சியமல்ல என்று மட்டுமே சொல்ல முடியும்.
தோழர்களே! விமர்சனம் செய்தாலோ, கேள்வி கேட்டாலோ இந்த ‘முற்போக்கு குண்டர்கள்’ என்ன செய்வார்கள் என்பதை நீங்களே அவர்களது எழுத்துகளைப் படித்தறியலாம். இதுபோன்ற எந்த வகையான அவதூறுகளும், அவமானப்படுத்தல்களுக்கும் நாங்கள் சோர்வுறப் போவதில்லை!
காலம் கடந்து நிற்கப்போவது மக்களுக்கு அறிவூட்டக்கூடிய எழுத்துகளே அன்றி இதுபோன்ற கேவலப்பட்ட ‘அவதூறுகள்’ அல்ல! இப்படியெல்லாம் எழுதுவதன் மூலம் இந்த முகநூலில், தமது நட்பு வட்டத்தில் இவர்கள் ‘புரட்சியாளராக’ வலம் வர முடியும். ஆனால் சமூக மாற்றத்திற்குத் தேவைப்படும் அறிவு வளர்ச்சிக்கான பங்களிப்பு என்னவென்று பார்க்கும்போது ‘அற்பப் பதிவுகளே’ அதிகமாக மிஞ்சும்!
நாங்கள் என்ன தொழில் செய்கிறோம் என்பது வெளிப்படையாகத் தெரிவதாலேயே இவர்கள் தனிப்பட்ட தாக்குதலைத் தொடுக்க முடியும், இல்லையா! ஆனால், அமைப்புகளில் இருப்பவர்கள், பதிப்பகம் நடத்துபவர்கள், சில எழுத்தாளர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், எப்படி சம்பாதிக்கிறார்கள் (எஸ்விஆர் உட்பட) என்று எதுவும் பொதுவில் தெரியாததால், அவர்கள் ‘முழுநேர’ புரட்சியாளர்கள். அமைப்பில் அட்டெண்டஸ் போட்டுக்கொண்டு, போராட்டங்களில் கலந்துகொண்ட செல்ஃபிகளைப் பகிர்ந்துகொண்டு, எல்லாருடைய பக்கங்களிலும் தாமாக சென்று விருப்பக்குறி இட்டு, சிலபல கமெண்டுகளையும் எழுதிவிட்டால் போதும் சமூகத்திற்காகத் தம்மையே அர்ப்பணித்துக்கொண்டவர்கள்! தம்முடைய சொந்த அடையாளத்திற்காக அமைப்பைப் பயன்படுத்திக்கொள்வதைவிட உதிரிகளாக இருந்துகொண்டு தம் எல்லைக்கும், பொருளாதாரத்திற்கும் உட்பட்டு சில வேலைகளைச் செய்வது எவ்வளவவோ மேலானது.
உழைப்பாளிக்கு, கூலி உழைப்பு அடிமைகளாக இருப்பதைத் தவிர வேறு சாத்தியங்கள் இல்லாத ஒரு அமைப்பில், கிடைக்கும் வாய்ப்புகளைத்தான் ஒருவர் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதைக் கூட அறியாத முற்போக்கு குண்டர்களாக இவர்கள் இருப்பது தெளிவாகிறது! இன்னொரு விஷயம், மார்க்சியத்தைப் பேசுவது, பாட்டாளி வர்க்க அரசியலைப் பேசுவதென்பது ஏதோ ஒழுக்க நெறியல்ல, அது சமூகம் என்னவாக மாறவேண்டும் எனும் இலக்கை முன்வைத்து முன்னேறும் ஒரு அரசியல் தத்துவம் மற்றும் நடைமுறை வழிகாட்டி. ஆனால், இன்றைய நிலைமையில் ஒருவர் நிலவும் அமைப்புக்கு உட்பட்டே உழைத்து வாழ முடியும். தன்னைப் போல் மற்றவரும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகிறார் என்பதையும் கணக்கில் கொண்டு எல்லாருக்கும் உழைப்புச் சுரண்டலில் இருந்து விடுதலை வேண்டும் என்பதால் மார்க்சியத்தைப் பேசுகிறோம். ஆனால் இவர்கள் பேசுவது முட்டாள்தனமான தூய்மைவாதம், அது ஒரு மதவாதக் கோட்பாடு! புறச்சூழலை கணக்கில் கொள்ளாத கருத்துமுதல்வாதம்.
‘படைப்பு’ (அல்லது வேலை) என்று வரும்பொழுது, அதன் மீது ஒருவருக்கு என்னவிதமான அதிகாரமும், சுதந்திரமும் இருக்கிறது என்பதைப் பொறுத்தே ஒருவரின் ‘அரசியலை’ விமர்சிக்க முடியும்! வசுமித்ர ஒரு சிலரைப் போல் ‘ஓனர்’ அல்ல, அவன் ஒரு கூலி உழைப்பாளி! கிடைக்கும் கூலிக்கு மாரடிக்கும் ஒரு பாட்டாளி! ஆனால், அந்தப் பாட்டாளி சம்பந்தப்பட்ட முதலாளிகளுக்கு விசுவாசமாக தனது அரசியலை சமரசம் செய்துகொண்டு, அம்முதலாளித்துவ நிறுவனங்களின் சுரண்டலுக்கு ஆதரவாகப் பேசினாலோ அல்லது அவர்களின் ‘சரக்கினை’த் தூக்கிப் பிடித்து எழுதினாலோ, புகழ்ந்துரைத்துக் கொண்டே ‘காக்காப் பிடிக்கும்’ வேலைகளைச் செய்தாலோ விமர்சிக்கலாம். (தான் பெற்ற விருது பற்றிய செய்தையைக் கூட பொதுவெளியில் பகிரக் கூடாது என்று சொல்லும் ‘பொறுக்கி’ அவன்!).
தொழிலை இழுத்து பேசி இவர்கள் தம்மை பிற்போக்குவாதிகள், கருத்துமுதல்வாதிகள், எல்லாவற்றுக்கும் மேல் தம் அடையாள நெருக்கடியின் காரணமாக, (தம்மை ஆதரித்து பேசாத சில அற்பக் காரணங்களுக்காக) தத்துவத்தைக் கூட விலை பேசுபவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்.
இத்தகைய போக்குகளை ஊன்றிக் கவனிக்கும் போது இந்துத்துவப் பாசிஸ்டுகள், இந்துந்துவ குண்டர்களுக்கு இவர்களும் சற்றும் சளைத்தவர்களல்ல என்பதையேக் காண முடிகிறது.

No comments:

Post a Comment