Oct 18, 2016

கருத்துச் சுதந்திரமும் தமுஎகசவும் - யமுனா ராஜேந்திரன்


நன்றி யமுனா. //மார்க்சிஸ்ட்டுகள் அல்ல// என்பதை நான் எற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அப்போதைய தவறுகள் குறித்து விமர்சனங்கள் உள்ளன. மற்றபடி அணுகுமுறை தொடர்பாக விமர்சிப்பது உங்களின் உரிமைபார்பட்டதே. அதை நான் மதிக்கிறேன். அதேபோல் அம்பேத்கரின் பங்களிப்பை, அவரது அர்ப்பணிப்பை ரங்கநாயகம்மாவும் சரி, நாங்களும் சரி எங்கேயும் மறுக்கவில்லை என்பதை தாங்களும் அறிவீர்கள். மேலும், எங்களின் மார்க்சிய மரபு குறித்த உங்களது முரண்பாடு, நட்பு முரண்பாடு என்று எடுத்துக்கொள்கிறேன். நேரில் சந்திக்கும் வாய்ப்பிருந்தால் நிச்சயம் உரையாடுவோம். கற்று கரை தேர்ந்து விட்டோம் என்று எதுவுமில்லை! இப்படி ஒரு பதிவை எழுதியமைக்கு நன்றி.

மேலும், நகைச்சுவைக்காக ஒரு சிறு குறிப்பு: நோக்கம் குறித்து ஆய்வு செய்தவர்கள், நிதிப் பின்னணி குறித்து ஆய்வு செய்வதாகச் சொல்லி உண்மைக்குப் புறம்பானப் பதிவுகளை எழுதியவர்கள் தமுஎகச மட்டுமல்ல, CPI (ML) Liberation கட்சி உறுப்பினர்களும் கூட. அவர்களில் ஒருவர் இப்பதிவுக்கு விருப்பக்குறி இட்டிருப்பது, தமுஎகச மீதான 'பாசத்தினாலோ' என்று எண்ணி சிரித்துக்கொள்கிறேன். அந்த நபரும் நூலை முழுமையாக வாசிக்கவில்லை. அக்கட்சியின் மற்றொரு உறுப்பினர்தான் வசுமித்ரவை பொறுக்கி என்று எழுதியதோடு, lumpen என்பதைத் தமிழில் அப்படி எழுதியதாக விளக்கம் கொடுத்தார்!

Yamuna Rajendran
1 hr
கருத்துச் சுதந்திரமும் தமுஎகசவும்
திருப்பூரில் தமுஎகச சந்திப்பில் கருத்துச் சுதந்திரப் பிரகடனத்தில் முன்வரிசையில் நின்று அவர்களது பிரபல எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா பிரதிக்ஞை எடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு என்னவிதமான கருத்துச் சுதந்திரப் பிரச்சினை வந்தது? ஈழவிடுதலை ஆதரவாளர்கள் அவரை அச்சுறுத்தினார்கள் என்பது அவர்களது தரப்பு. ஆகவே, ஆதவன் தீட்சண்யாவின் கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல். 
ஆதவன் தீட்சண்யா என்ன செய்தார்? இலங்கை ராணுவத்தினால் முள்ளிவாய்க்கால் பேரழிவில் கொல்லப்பட்ட விடுதலைப் பலிகளின் தலைவர் பிரபாகரன், அவரது புதல்வி, அவரது ஆண் மகவு போன்றோரை முன்வைத்து ஒரு நக்கல் புனைவை வெளியிட்டார். இப்படியான ஒரு நக்கல் புனைவை ஈ.எம்.எஸ். பி.டி.ரணதிவே, பி.ராமமூர்த்தி போன்றவர்கள் பற்றி எழுதி வெளியிட்டால் தமுஎகச வின் எதிர்விணை எவ்வாறு இருக்கும்? 
நீங்கள் யாருக்குச் சார்பாக யாரை நக்கல் செய்கிறீர்கள் என்பது எப்போதும் முக்கியம். உண்மையில் தமுஎகச அதற்காக வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். உ.ரா.வரதராஜன் பற்றி ‘மக்கள் டிவி’யின் கருத்துக்கு டிவி ஸ்டேஷனை உடைத்துவிட்டு பிற்பாடு வருத்தம் தெரிவித்தீர்கள். இன்றுவரை ஆதவன் தீட்சண்யா கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டவர் என்கிற மாதிரியான சித்திரத்தை முன்வைத்து வருகிறீர்கள். 
அம்பேத்கர் தொடர்பான ரங்கநாயகம்மாவின் நூலின் அணுகுமுறையுடன் எனக்குத் துப்புரவாக உடன்பாடு கிடையாது. தலித் ஒடுக்குமுறை என்பது ஒரு நிதர்சனம். அதிலிருந்து விடுபட வாழ்நாளெல்லாம் சிந்தித்தவர், செயல்பட்டவர், எழுதியவர் அம்பேத்கர். மார்க்சிஸ்ட்டுகள் அல்ல. இந்த ஸ்தூலமான நடைமுறையிலிருந்துதான் அம்பேத்கருடனான உரையாடல் நிகழ வேண்டும். அம்பேத்கரின் மார்க்சிஸ்ட்டுகள் தொடர்பான பார்வை இரு படிநிலையிலானது. 1.இந்திய மார்க்சிஸ்ட் கட்சிகளுடனான அவரது அனுபவம். 2.ஒரு கன்ஸ்டிட்யூசனல் லிபர்ட்டேரியனாக கோட்பாட்டு மாரக்சியம் தொடர்பான அவரது பார்வை. அவர் சென்ற நூற்றாண்டின் மத்தியில் மரணமடைகிறார். இதற்குள் இருந்துதான் அவரது கோட்பாட்டு மார்க்சியம் தொடர்பான புரிதலை நாம் ‘இன்று’ மதிப்பிட வேண்டும். அவர் அது பற்றிச் சொல்வதை நாம் அப்படியே ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், என்றையும் விட இன்று சோவியத்-சீன அனுபவங்களுக்கு அப்பாலான மார்க்சிய அனுபவங்கள் நமக்குக் கிடைக்கின்றன. 
சரி. இது புறம். ஒரு மார்க்சியன் எனக் கருதுபவன் அம்பேத்கர் பால் கொள்ள வேண்டிய அணுகுமுறை இதுதான் என நான் நினைக்கிறேன். ஆனால், ஆதவன் தீட்சண்யாவும் எஸ்.வி.ஆரும் தமுஎகச தோழர்களும் செய்வது என்ன? நூலையே வாசிக்காமல் அரைகுறை விமர்சனம். பிறகு, கொற்றவையிடம் நோக்கம் கண்டுபிடிப்பது. ரங்கநாயகம்மா ‘குகை மார்க்சியர்’ எனில் அதனை எஸ்.வி.ஆர்.நிறுவ வேண்டும். எஸ்.வி.ஆரின் நூலை முழுமையாக வாசிக்காமல் தனிநபர் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருப்பதை அவர் ஒப்புவாரா? கொற்றவை, வசுமித்ர பார்வைகளில் அம்பேத்கர் பறறி மட்டுமல்ல அவர்களது மார்க்சிய மரபு தொடர்பான பார்வைகளும் பெரும்பாலானவை என்னால் உடன்பட முடியாதவை. ஆனால், தமுஎகசவினரின் அணுகுமுறை நாகரீகமானது அல்ல. கொற்றவையும் வசுமித்ரவும் ஒப்பீட்டளவில் நாகரீகமான சொற்களில் வாதிடுகிறார்கள். தமுஎகசவினர் பெரும்பாலும் தனிநபர் தாக்குதலும் நோக்கம் கண்டுபிடிக்கும் தாக்குதலும் தொடுக்கிறார்கள். இது நெடுங்காலமாகவே அவர்களிடம் இருக்கும் அணுகுமுறை. ஈழவிடுதலை தொடங்கி இன்று வரை இதனை அவர்கள் வெளிப்படையாக எதிர்கொண்டதேயில்லை..

(as shared in FB)

No comments:

Post a Comment